தவெக மாநாடு: தொண்டர்களுக்கு விஜய்யின் முக்கிய அறிவுரை

0
37

TVK VIJAY: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தேர்தல் ஆணையத்திலும் அவர் பதிவு செய்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை திட்டமாக வைத்து இக்கட்சியை தொடங்கியிருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக். 27) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு இன்று தனது ‘X’ தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித் தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.

ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (அக். 27) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here