TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27ஆம் தேதி மாலை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலமும், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 207 ஏக்கர் நிலமும் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மாநாட்டு மேடைக்கு விஜய் செல்லும் வகையில் தனி வழிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு அப்பாதையில் தார் சாலை போடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடைக்கு வரும் விஜய், தொண்டர்கள், ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்த ஏதுவாக மாநாட்டு மேடையுடன் 800 மீட்டர் நீளத்திலும், 12 அடி உயரத்திலும் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை பறக்க விட்டுள்ளனர்.
மாநாட்டின் பாதுகாப்பு கருதியும், மாநாடு நடைபெறும் பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையிலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் முழுவதும் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் உள் அலங்காரப்பணிகள் நடந்து வருகிறது. மேடையின் முன்பாக கட்சி கொடியின் நிறங்களுடனும், கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள இரண்டு யானைகளின் உருவமும் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ் பகுதியில் வெற்றிக் கொள்கை திருவிழா என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவுவாயில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
அதில் 2 யானைகள் இருபுறமும் பிளிறும் வகையில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த யானைகளுக்கு மேல்புறத்தில் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட உள்ளது. இதுதவிர மாநாட்டு மேடைக்கு அருகில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது பேனர்களுக்கு இடையே விஜய்யின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக மாநாடு நிகழ்விட முகப்பில் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் பேனர்களும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களின் வசதிக்காக 300 குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர்.
இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது.
இந்த நிலையில், வேட்டையன் படத்தில் இடம்பெற்ற சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஜினிகாந்துக்கு சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆக்சன் சொல்லித்தருவது, அதை ஒளிப்பதிவாளர் படமாக்குவது.
இயக்குநர் ஞானவேல் காட்சி குறித்து விளக்குவது என அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.