TVK VIJAY: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

தவெக கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச இருக்கிறார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன?. எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது நெஞ்சில் குடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் குவிந்ள்ளனர்.

தொடர்ந்து, இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தவெக மாநாடு நடைபெறும் நிலையில் வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின. தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, 3 மணியளவில் தொடங்கி தற்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.