VISHAL: நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழக’ முதல் மாநாடு விழுப்புரம், விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் விஜய் கட்சி மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நடிகர் விஷால், “விஜய்யின் கட்சி மாநாட்டில் அழைத்தால் கலந்து கொள்வேன். வாக்காளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தால் மட்டுமல்ல அழைப்பு விடுக்காமலேயே மாநாட்டில் கலந்து கொள்வேன். அவர் மக்களுக்கு என்ன கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே அங்கு செல்வேன்.
புதிய அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன பேச போகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலாக இருக்கிறேன். நான் ஏற்கனவே அரசியல்வாதிதான். சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிகள்தான். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

மாநாட்டை மக்களோடு மக்களாக நின்று நானும் பார்ப்பேன். இதற்கு அழைப்பு வேண்டும் என்று அவசியம் இல்லை. புது அரசியல்வாதி என்ன செய்ய போகிறார் என்பதை டிவி-யில் எதற்காக பார்க்க வேண்டும். நேரில் பார்த்தால் நல்லா இருக்கும்” என்றார்.