VADIVASAL: ‘வாடிவாசல்’ படத்திற்கான இசைபணியை தொடங்கிவிட்டதாக ‘கிங்ஸ்டன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி. பிரகாஷ் கூறியிருந்தார். ‘விடுதலை 2’ திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்று வரும் கல்ச்சுரல்ஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்டையும் கொடுத்தார். அவர், “வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மே அல்லது ஜுன் மாதம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்.” என்று கூறினார்.
‘வாடிவாசல்’ படத்திற்குபின் தனுஷை வைத்து மற்றுமொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தற்போது பங்கேற்று வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக கூறி வந்த நிலையில், சமீப காலமாக வெளியாகும் அப்டேட்டுகள் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.