ரூ.1.72 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள்.. இலவசமாக கொடுத்த ரசிகர்

0
45

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி உள்ளது.

படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டன. அதாவது பைரஸி என்ற இணைய தளத்தில் முழு படமும் எச்.டி வடிவில் லீக் ஆகி இருக்கிறது.

சிக்கந்தர் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனிடையே மும்பையில் சல்மான் கான் ரசிகர் ஒருவர், சிக்கந்தர் படத்துக்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி அதனை மக்களுக்குக் கொடுத்து படத்தைப் பார்க்க ஊக்குவித்துள்ளார்.

இவர், அந்தத்தொகைக்கு 817 டிக்கெட்டுகளை ரூ. 1.72 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அதனை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர், டிக்கெட்டுகளை விநியோகம் செய்த ரசிகர், ராஜஸ்தான் மாநிலம் ஜும்ரு பகுதியைச் சேர்ந்த குல்தீப் கஸ்வான் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை சல்மான் கான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு டிக்கெட்டுகளை இலவசமாக விநியோகம் செய்ய ஊக்குவிக்கப்பட்டதா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

பின்னர் இது குறித்துப் பேசிய குல்தீப் கஸ்வான், தான் தீவிரமான சல்மான் கான் ரசிகன் என்றும், தனது சொந்த பணத்தில் டிக்கெட்டுகளை விலைக்கு வாங்கி இலவசமாக விநியோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சல்மான் கான் ரசிகர்கள் பலர் இதனை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துவந்தாலும், சிக்கந்தர் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், ரசிகர்கள் இவ்வாறு செய்வதாகப் பலர் விமர்சித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here