KANGUVA: சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. திஷா பதானி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, பாபி தியோல், கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 38 மொழிகளில் 3D முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ‘ஃபயர் சாங்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘YOLO’ என்ற பாடல் கடந்த (அக்.21) வெளியானது.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்றது. இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும், வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதாக படக்குழு தெரிவித்தது.
அதன்படி, ‘கங்குவா’ படம் நேற்று (நவ.14) உலக அளவில் ரிலீஸானது. ‘கங்குவா’ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 22 கோடி வசூலித்து, இதற்கு முன்பு இந்தியாவில் சூர்யாவின் சிறந்த ஓப்பனிங்காக இருந்த சிங்கம் 2 படத்தின் ரூ.12 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் கங்குவா, தமிழ் நாட்டில் ரூ.13.65 கோடியும், கேரளாவில் ரூ. 4 கோடியும், இந்தியில் ரூ. 3.25 கோடியும் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.