KANGUVA: தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர், பலரிடம் பல கோடிகளை பெற்று பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்தும் விட்டார். இதையடுத்து அர்ஜூன்லாலிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க சொத்தாட்சியரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஞானவேல் ராஜா, அர்ஜுன் லாலுக்கு பல கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நாளைக்குள் (நவ.13) ரூ.20 கோடியை ஞானவேல் ராஜா செலுத்த வேண்டும்.
அவ்வாறு பணத்தை செலுத்தவில்லை என்றால் ‘கங்குவா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில் கங்குவா படத்தை வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி ரூ.1.60 கோடியை பதிவாளரிடம் செலுத்தாமல் இந்த கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, சூர்யாவின் 3 படத்திற்கு ஹிந்தி டப்பிங் உரிமையை ரூ.6.6 கோடிக்கு பெற்ற அந்த நிறுவனத்திற்கு, படம் கொடுக்காததால், ரூ.5 கோடி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திருப்பி கொடுத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பியூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் தரவேண்டிய பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் அளிக்காத காரணத்தால் பியூல் டெக்னாலஜி பட நிறுவனம் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் பணத்தை நீதிமன்றம் தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.