SHANKAR: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கரின் கடைசி 2 படங்களான கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஆகியவை வசூல் ரீதியில் தோல்வியை தழுவின. இந்த நிலையில், ‘எந்திரன்’ படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த இயக்குனர் ஷங்கர், “அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது.
அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தொடுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர், இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், விசாரணையை ஏப்ரல் 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.