சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்.30ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய்சதீஷ் கூறுகையில், “ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது.

முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய்சதீஷ், வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினார். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு சரியாக செய்யப்பட்டது.
தற்போது, ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் இரு நாள்களில் வீடு திரும்புவார்” என்றார்.இந்த நிலையில், மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினி பூரண குணம் அடைய வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் சார்பாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ், ரஜினிகாந்த் குணமடைய வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். பணிகளில் பங்கேற்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.