VEERAM: அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ரிலீஸான படம் ‘வீரம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். சந்தானம், விதார்த், பாலா, நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சிறுத்தை சிவா, அஜித்துடன் இணைந்த முதல் படம் இது. இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆக்ஷன் படமான இது, ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது.
45 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 130 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட கதையான ‘வீரம்’ படத்தில் கிராமத்து அண்ணனாக அசத்தினார் அஜித். இந்த படத்தில் அஜித் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நரைமுடியுடன் படம் முழுவதும் வேட்டி சட்டையில் வலம் வந்திருப்பார்.
வீரம் படத்தைத் தொடர்ந்து, சிவா கூட்டணியில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாகத் தொடர் வெற்றிப்படங்களை அஜித் கொடுத்துள்ளார். நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அவர் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.