ILAIYARAJA: தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ”விடுதலை 2′ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர், சமீபத்தில் ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருந்தார். இது கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட்டது. இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கான பாராட்டு விழா குறித்து பேசியுள்ளார். அதாவது, வருகிற ஜூன் 2ஆம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அன்றைய தினமே சென்னையில் அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.