கர்நாடகா மாநிலம் மைசூரில் தசரா திருவிழா நடைபெறவுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மைசூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் மக்கள் வருகை தருகின்றனர்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துனை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஹம்ப நாகராஜையா, கன்னட இன மக்களின் குலதெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்களுக்கு நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசை கச்சேரிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வுகள் இசை ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது. அதன்படி ‘கேலரி 1’ ஒரு நபருக்கு ரூ.8,000, ‘கேலரி 2’ ஒரு நபருக்கு ரூ.5,000, இதர இருக்கைகளில் ஒரு நபருக்கு ரூ.2,500 மற்றும் ரூ.1,500 ஆகிய கட்டணங்களில் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளை www.mysoredasara.gov.in மற்றும் bookmyshow மூலம் ஆன்லைனில் பெறலாம் எனப்படுகிறது.