Lokesh Kanagaraj: தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவிற்கே புதிய விசயமாக அவர் கொண்டுவந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனது, இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவருகிறார். மிஸ்டர் பாரத்’ திரைப்படத்திற்குப் பிறகு… அதாவது 38 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் நடிக்கிறார் சத்யராஜ். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், லோகேஷ் கனகராஜ் படங்கள் குறித்து பேசியிருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பவன் கல்யாண், “நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் நடிப்பு மிகவும் பிடிக்கும், அதேபோல மணிரத்னத்தின் படங்களும் பிடிக்கும். சமீபத்தில் லியோ படத்தை பார்த்தேன். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான வேலை செய்திருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.
அதை பார்த்த லோகேஷ் கனகராஜ், பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது பவன் கல்யாண் சார். என் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நன்றி சார்” என குறிப்பிட்டுள்ளார்.